Saturday, 14 September 2013

ஆந்தை குல வரலாறு

ஆந்தை குல தகவல்கள்


சிறப்புமிகு வரலாற்றுப் பெருமையுடைய கொங்கு வேளாளர் குலங்களில் ஆந்தை குலமும் ஒன்று கொங்கு நாடெங்கணும் பரவிப் பல ஊர்களைக் காணியூராகக் கொண்டவர்கள் ஆந்தை குலத்தினர்.ஆந்தை என்ற சொல் மிகவும் தொன்மையானது தொல்காப்பியத்திலும்,சங்க இலக்கியங்களிலும் பயின்று வரும் சொல்.சங்க இலக்கியங்களிலும் ,குகை எழுத்துக்களிலும்,அகழாய்வுப் பானை ஒடுகளிலும் ஆதன் என்ற சொல் மிகுதியாக வந்துள்ளது.ஆதன் அவினி,நல் ஆதன்,சேரல் ஆதன்,ஆதன் ஒரி,எழிலி ஆதன் எனக் காண்கிறோம்.தொல்காப்பியர் "ஆதனும் பூதனும்" என்று நூற்பாவில் கூறியுள்ளார். தொல்காப்பியர் ஆதன் என்னும் சொல் தந்தை என்ற சொல்லோடு சேரும்போது அவை"ஆந்தை" என்று மாறும் என்று கூறுகிறார்.ஆதன்+தந்தை=ஆந்தை என்றாகும். இதனை வேளாள புராணத்தில் கந்தசாமிக் கவிராயர்.

"ஆதன் தந்தை மரூஉ குறிஞ்சி முன்னூர்
ஆந்தை யான சீர்கொண்ட பெரியார்"

என்று கூறிகிறார். சங்க காலத்தில்,அஞ்சில ஆந்தையார்,ஒதல் ஆந்தையார்,சிறைக்குடி ஆந்தையார்,பிசிர் ஆந்தையார் என்ற பெயருடைய புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.அவர்கள் பெரும் புகழும் சிறப்பும் பெற்றிருந்தமையால் ஆர் விகுதி பெற்று ஆந்தையார் என அழைக்கப்பட்டனர்."ஆந்தை" என்ற பெயரில் குறுநில மன்னர் ஒருவரும் வாழ்ந்துள்ளார்.அவர் "எயில்" என்ற ஊரைச் சேர்ந்தவர்."மன் எயில் ஆந்தை" என்று புகழப்படுகிறார்.பூதப்பாண்டியன் எயில் தலைவன் ஆந்தையைத் தன் கண் போன்றவன் என்று புகழ்ந்து பாடியுள்ளார்.பிசில் ஆந்தையார், கோப்பெருஞ்சோழனின் நண்பர் கோப்பெருஞ்சோழன் இறந்தவுடன் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

எனவே "ஆந்தை" என்ற குல முதல்வரால் ஆந்தை குலம் பெயர் பெற்றிருக்கலாம்.டி.எம்.காளிப்பா,கு.சேதுராமன் போன்றோர் ஆந்தை என்ற பறவையின் பெயரால் இக்குலம் பெயர் பெற்றது என்பர் ஆந்தை ஆந்தை குலத்தாரின் அடையாளச் சின்னம் என்றும்,அவர்கள் ஆந்தையைப் புனிதச் சின்னமாக கருதுவர் என்றும் அவர்கள் கூறுகிள்றனர்.சிலர் ஆந்தையைக் கொல்லுவதோ,துன்புறுத்துவதோ கூடாது என்றும்ர,அப்படிச் செய்தால் தங்கள் குலத்திற்குத் தீங்கு ஏற்படும் என்றும் கூறுகின்றனார்.சில இடங்களில் ஆந்தைப் பறவை தங்களுக்கு ஆகாது என்றும் சொல்வர்.

ஆந்தைப் பறவை அழகற்றது பெரிய விழிகளையுடையது ஒன்றும் அறியாமல் விழித்து நிற்பவனை"ஆந்தை போல் விழிக்கிறான்" என்பது உலக வழக்கு அப்படிப்பட் ஆந்தையின் பெயரால் குலப் பெயர் அமையுமா?என்பது ஆய்வுக்குரியது.(பாகிஸ்தான் நாட்டின் தேசியப் பறவை ஆந்தை).

காணியூர்கள்:-
ஆந்தை குலத்திற்கு இரண்டு காணிப்பாடல்கள் கிடைத்துள்ளன.ஒரு பாடல் வள்ளியறச்சலையும்,மற்றொரு பாடல் கொன்னையாறையும் முதல் ஊராகக் குறிக்கிறது.அதிகமான காணியூர்களைக் கொண்ட கொங்கு வேளாளர் குலங்களில் ஆந்தை குலமும் ஒன்று கீழ்க்கண்ட ஊர்களில் காணியூர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

அத்தனூர் இராயகுளம் கரியான்குளம்
அருமணநல்லூர் ஊத்தலூர் கருவூர்
அனுமன்பள்ளி ஊத்துக்குளி காகம்
ஆதியூர் ஊதியூர் காஞ்சிக்கோயில்
ஆரியூர் எதிரனூர் காளமங்கலம்
ஆலத்தூர் ஒடுவங்குறச்சி கிருதநல்லூர்
ஆவணிப்பேரூர் கதிராநல்லூர் கீரனூர்
குந்தாணி தேனூர் முத்னூர்
குளத்தூர் தோளூர் முத்தூர்
கூத்தம்பூண்டி பட்டணம் முருங்கமங்கலம்
கொற்றனூர் பரமுத்தி முருங்கைத்தொழு
கொன்னையார் பருத்தியூர் முளசை
சடையகுளம் பாலமேடு முறங்கநல்லூர்
சிறுக்கிணறு பிடாரியூர் முன்னூர்
செம்பியநல்லூர் புத்தூர் மோரூர்
சென்னிமலை பொன்பரப்பி வடுகநகர்
திண்டமங்கலம் மங்கலம் விண்ணப்பள்ளி
திருச்செங்கோடு மருதுறை வெள்ளகோயில்
திருவாச்சி மாணிக்கபுரம் வயிரூசி
தூசியூர் மாம்பாடி வள்ளியறச்சல்
தூரம்பாடி மானூர்.

ஆகிய காணியூர்களை இரண்டு காணிப் பாடல்களும் கூறுகின்றன.தென்கரை நாட்டுப் பன்னிரண்டு ஊர்களில் கொற்றனூர்,குறிச்சி,கோமங்கலம்,தூரம்பாடி,மாம்பாடி,குகைமண்குழி என்ற ஆறு ஊர்களில் ஆந்தை குலத்தார்க்கு காணியுண்டு.காங்கய நாட்டில் வள்ளியறச்சல்,மருதுறை,வெள்ளகோயில் ஆகிய மூன்று ஊர்களில் ஆந்தை குலத்தார்க்குக் காணியுண்டு.

முதல் காணிப்பாடல்

"நீதிசேர் வள்ளிநகர் பரமுத்தி வெள்ளைநகர்
நிகர்சடைய குளம்மருதுறை
நேர்பட்ட ணம்காள மங்கை முருங் கைத்தொழு
நீலவன் பள்ளிகருவூர்

தீதிலா முத்தனூர் முன்னூர் கீரனூர்
தென்னவன் மங்கைமோரூர்
திருவாச்சி யூர்புத்தூர் காகம்திண் டமங்கை
திருச்செங் கோடுதோளூர்

ஓதும் பிடாரியூர் பருத்தியூர் ருத்தாணி
ஓடுவன் குறிச்சிமுளசை
உற்றசெம் பியநல்லூர் கதிராநல் லூர்எதிரன்
ஊர்பாலை மேடுதேனூர்

போதில்ஊற் றுக்குழி மாயன்விண் ணப்பள்ளி
பொன்னூதி கிரிகொற்றையூர்
புகழ்ஆலத் தூர்முருங் கமங்கைமா ணிக்கநகர்
புதியகாஞ் சிக்கோயிலும்

கோதில்கூத் தம்பூண்டி வடுகநகர் ராயகுளம்
கொண்டபெயர் விளங்கும்மங்கை
குலவுகரி யான்குளம் காக்கைதூரம்பாடி
ஒங்குமா னூர்குளத்தூர்

ஆதியூர் தூசியூர் அத்தனூர் ஆரியூர்
ஆவணிகொள் பேர்ஊற்றலூர்
அருமணநல் லூர்கொற்றை அனுமநகர் காணிகொளூம்
ஆந்தைகுல வேளிர்குலமே"
('அனுமநகர்' என்பதற்குப் பதிலாக 'அறுபதூர்' என்றும் 'பாடபேதம் உண்டு'.)

இரண்டாம் காணிப் பாடல்

"பன்னுதமி ழாகரன் ஆந்தைகுல மரபாளர்
பதிகொன்னை யாரு முத்தூர்
பருத்தியூர் மாணிக்கம் தூரைநகர் எதிரனூர்
பட்டணம் பாலைமேடு
சென்னிகிரி வயிரூசி தோளூர் பிடாரியூர்
திண்டமங் கலம்மருதுறை
திருவாச்சி வள்ளிநகர் மானூர் வெள்ளக்கல்
சிறந்தவிண் ணப்பள்ளியும்
மன்னுபுகழ் மோரூர் கிருதநல் லூர்காகம்
மருவுகூத் தன் பூண்டியும்
வளமான ருத்தாணி சடையகுளம் மிகுசெல்ல
மானஒடு வன்குறிச்சியும்
துன்னுமாம் பாடி முறங்கநல்லூர் கார்முகில்
தோறாத புத்தூருடன்
துய்யகரி யான்குளம் பொன்பரப்பி பாலைநகர்
சிறுக்கிணறு கொற்றனூரே!"

சில தனிப்பாடல்கள் மூலம் குறிச்சி,குடிமங்கலம்,கொங்கூர்,பெற்றம்பள்ளி, கோமங்கை, குகைமண்குழி, மருவூர், மொஞ்சனூர், வேலம்பாளையம்,வேலூர் ஆகிய ஊர்களிலும் ஆந்தை குலத்தார்க்குக் காணியுரிமையுண்டு என்று தெரிகிறது. 
குறிச்சி ஆந்தை குலத்தார் காணி பெற்ற ஊர்.

"குடிகள் பொன்னூதிப் குமரனைப் பெற்ற
அழகீசிர் பொன்னாச்சி யம்மன்-பழகும்
அருள்பரவும் பள்ளிகொண்டார் ஆந்தைகுல மன்னர்
பரவும் குறிச்சிப் பதி"

என்பது குறிச்சிக் காணிப் பாடலாகும். 

சிறப்புகள்:-

"ஆந்தை குல வேளிர்","ஆந்தை குல மன்னர்","பொன்மேழித் தலைவர்", "பட்டயகாரர்கள்", "ஆந்தை குலாதிபர்", "ஆந்தை குல மரபாளர்", "நீள் ஆந்தை", "ஆவல் சேர் ஆந்தை", "பன்னு தமிழாகரர்", "தமிழ் மொழியைச் சாற்றிய ஆந்தை குலர்" என்று பலவாறு புலவர் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்ட ஆந்தை குலத்தார் அரசர்களாலும், பாளையக்காரர்களாலும் மிகவும் சிறப்பிக்கப்பட்டவர்கள்.

ஆந்தை குலத்தார் முகத்தைப் பார்த்தாலே எங்கள் கலி (வறுமை)எங்களை விட்டு ஓடிவிடும் என்று பாடுகிறார் ஒரு புலவர்.

"தாட்டிமை யாய்உன்னைத் தேடிவந் தேன்எந்தன்
வறுமையால் தமிழைப்பாடி
பேட்டிசெய்து கண்டேன் உனது திருமுகம்
நோக்கிப் பிரியமாக
நாட்டமுடன் தூரைநகர் ஆந்தைகுல நாச்சிமுத்து
ஈன்றெடுத்த நளினயோகன்
தாட்டீக னான அத்தியணன் முகங்கண்டால்
கவிஞர்கலி ஒடும்தானே".

என்பது ஒரு புலவர் தூரம்பாடி ஆந்தை குல அத்தியண கவுண்டர் மீது பாடிய பாடல் ஆகும்.ஆந்தை குலத்தாரின் முதன்மைக் காணியூரான வெள்ளகோயில் தென்முக ஆந்தை,வடமுக ஆந்தை என இரண்டு பிரிவினராக வழிபடுகின்றனர்.தென்முகத்தாருக்குத் திருமஞ்சன நீர் கொண்டு வருவதும்,வடமுகத்தாருக்கு படியரிசி வழங்குவதும் உரிமை.

நடுகற்களில் ஆந்தை:-
ஆந்தை குலத்தினரை வீரம் மிக்கவர்கள் என்று கொங்குச் சமுதாய முதல் ஆய்வாளர் டி.எம்.காளியப்பா அவர்கள் கூறுவார். தங்கள் நாட்டையும், ஊரையும், கால் நடைகளையும் பாதுகாக்கும் பொருட்டும் போர் செய்து வீர மரணம் அடைந்து நடுகல்லாக நிற்பவர்களில் சிலர் பெயர்கள்."தேவ ஆந்தை", "கொற்ற ஆந்தை","குமர ஆந்தை"என்று காணப்படுகின்றன. இவர்களில் சிலர் ஆந்தை குலத்தாரின் முன்னோராக இருக்கக்கூடும். 

பதினாறும் பெற்று வாழ்க:-

ஒரு புலவர் தெய்வங்கள் எல்லாம் உன்னைக் காத்திடப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று ஆந்தை குலச் சின்னைய கவுண்டரைப் பாராட்டுகிறார்.
"செப்பரிய சதகோடி வேதங்கள் தேடரிய
திசைமுகத்து அயனும்மாலும்
சிங்கவா கினிசத்ரு சங்காரி பெரியம்மை
தேவிசின் னம்மைஉமையும்
அப்பணி சடையப்பர் மிக்ககுல மாணிக்கர்
ஆதிகுங் குமவல்லியும்
அம்புயச் சோபணமும் கூறியே என்றென்றும்
அருள்தந்து உமைக்காத்திட
நற்புகழ் மடந்தையர்கள் வங்கிஷம் ஆந்தைகுலம்
நலம்பெற உதித்தசதுரன்
நாச்சிமக ராசனருள் ராச்சிய யோககண
நன்னய குணாநிதியெனும்
தர்க்குதரு வுக்குநிகர் சின்னய மன்னவன்
கொடைக்குக் கர்ணன்எனவே
தலையென்று காசினியில் பதினாறும் பெற்றுக்
கருத்துடன் மிகவாழியே"

என்பது புலவர் பாடிய பாராட்டுப் பாடல் ஆகும்..

வேணாடர் தொடர்பு:-
பெரிய குலத் தலைவர் 24 நாட்டில் பெரிய வீடு என்று புகழப்படும் வேணாடுடையார் தலைநகர் கொற்றனூர்க்குக் காணியாளர் 7 பேர் அவர்களை ஏழ்முதன்மையார் என்பர்.அவர்களில் ஆந்தை குலத்தாரும் ஒருவர்.வேணாடரின் இரத்தினமூர்த்தி விறலிவிடு தூது"பூமேவும்,ஆந்தை குலதிலகனான பெரியணனும் வேந்து சிலம்பண்ண விற்பனனும்" என்று கூறுகிறது.
இவர்கள் அனைவரையும் துணையாகக் கொண்டே வேணாடர் அதிகாரம் செய்கிறார்.

'தானிவர்கள் ஏழ்முதன்மை யாதி எதிர்த்தவரை வெற்றிகொண்டு
வாழ்வார்கள் தாம்கொற்றை மாநகரில்"

என்பது விறலிவிடு தூதுத் தொடர்களாகும்.

உறையூர்ச் சோழருக்காகத் தென்கரை நாட்டில் வேணாடர் செய்த போரில் தென்கரை நாட்டில் கொற்றனூர்,குறிச்சி,கோமங்கலம்,தூரம்பாடி,மாம்பாடி,குகைமண்குழியில் காணி கொண்டு வாழ்ந்த ஆந்தை குலத்தார் பெரிதும் உதவினர்.அதனால் வேணாடனர் மரபினர் முடிசூட்டி விழாவில் வாள் எடுத்துக் கொடுக்கும் சிறப்பு உரிமையை ஆந்தைகுலத்தார் பெற்றுள்ளனர்..
காடை குலச் செப்பேடு"குறிச்சி வேணாடுடையார்"என்றே அழைக்கிறது.வேணாடுடையார் தங்கள் சம்பந்திகளுக்குக் குறிச்சியை அளித்துவிட்டனர் என்று க.பழனிசாமிப் புலவர் கூறிகிறார்.இன்று குறிச்சி என்ற பெயர் மறைந்து "கம்புளிம்பட்டி"என்ற பெயரே வழக்கில் உள்ளது.

வேளாள புராணம் அரங்கேற்றம்:-

வீராட்சிமங்கலம் கந்தசாமிக் கவியார்"வேளாளர் புராணம்"பாடினார்.29 படலமும் 1373 கவிதைகளும் கொண்ட அரிய இலக்கியம் இன்றைய விஞ்ஞான நுட்பம் கூறும் வேளாண்மைச் செய்திகள் பலவற்றை அன்றே அவர் பாடியுள்ளார்.

அந்தநூலை அரங்கேற்றம் செய்தவர்கள் முன்னூர் ஆந்தை குலத்தார் என்னும் குறிச்சியில் வாழ்ந்த ஆந்தை குலத்தார்.குறிச்சி தென்கரை நாட்டு ஊர் கொற்றனூர் அருகில் உள்ளது அரங்கேற்றத்தில் முன்னூர் ஆந்தை குலத்தாரும் கலந்து கொண்டனர்.

"துன்னுபுகழ்க் குறிச்சி முன்னூர் ஆந்தை
கோத்திரத் தார்கள் தொகையாய்க் கேட்ப
முன்னுற ஆதரவோடு மொழிந்தது இது"
"தாளாண் வாழ்க்கை வேளாண் வாழ்க்கை
மன்றும் முன்னூர்க் குறிச்சி
ஆந்தைகோத் திராசபை அரங்கேற்றினன்"
"வான்உறு தென்கரை மருவூர் குறிச்சியும்
மன்னூர் எல்லாம் பின்னூர் என்னப்
பொன்னூர் கமல முன்னூர் இரண்டு
காணி ஆந்தை காராளர் கேட்ப
கண்மலி ஊரில் கவிச்செல் லப்பன்
திருப்பணி ஆலயம் விருப்புடன் இருந்த
கணபதி சந்நதி கவியரங் கேற்றினன்"

குறிச்சி மேலை விநாயகர் கோயிலில் அரங்கேற்றம் நடைபெறற்றது.அக்கோயிலைக் கட்டியவர் குறிச்சி ஆந்தை குலச் செல்லப்ப கவுண்டர்.கவியரங்க ஏற்பாட்டைச் செய்தவர் குறிச்சி ஆந்தை குல செல்லப்பகவுண்டர் மகன் இராமசாமிக் கவுண்டர்.காசி உடையான் சின்னத் தம்பிக் கவுண்டரும் துணை புரிந்தார். இதனை கீழ்காணும் பாடல் விளக்குகிறது.

"வேளாண் புராணம் விளங்க இயற்றித்
தன்னிகர் இல்லா முன்னூர் ஆந்தை
மரபில் உதித்த மங்கையயர் மதனன்
செங்குவ ளைத்தார் தங்கிய புயத்தன்
மேழிக் கொடியை விளங்க நாட்டினோன்
தரணியர் மதிக்கும் பெருமை தங்கினன்
நம்பின வர்களுக்கு அன்பு செய்திடும்
இராம சாமி நாமம் தரித்தோன்
தன்கிளை கூட்டி அன்புடன் கேட்ப
தண்மலி பொழில்சூல் கண்மலி நகரில்
மேலைக் கணபதி ஆலயம் அதனில்
மறையவர் மாமறை வாழ்த்த
அறிஞர் மகிழ அரங்கேற் றினனே!"

முன்னூர் ஆந்தை குலத்தார் வீராட்சிமங்கலம் கந்தசாமிக் கவிராயருக்கு 2000 ரூபாய் ரொக்கமும்,இரட்டை காளை பூட்டிய அழகிய சவாரி வண்டியையும் அன்பளிப்பாக அளித்தனர்.
இப்புராணத்தை கொங்காருபாளையம் சோதிடர்,புலவர் முத்துசாமி வாத்தியார் நூலாசிரியரிடம் விலைக்கு வாங்கி ஈரோடு நித்யகல்யாண சுந்தரம் அச்சுக்கூடத்தில் 1907 ஆம் ஆண்டு பதிப்பித்தார்..புலவர் மு.பழனிச்சாமி அவர்களைக் கொண்ட உரை எழுதி அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் அழகிய பதிப்பாக வெளியிட்டுள்ளார்.வேளாள புராண வெளியீட்டு விழா ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 26.1..2000 அன்று நடைபெற்றது.விழா ஏற்பாட்டைச் செய்தவர் ஆந்தை குல டி.சந்திரசேகரன்(கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர்)அவர்கள்.

சிவமலைக் கொடை:-
சிவமலை காங்கய நாட்டின் தலைமைத் தலம்.சிவமலையாண்டவர் திருவிழாவில் காங்கய நாட்டின் 14 ஊர்க்கவுண்டர்களுக்கும் பங்கு உண்டு.எல்லோரும் சிறப்பிக்கப்படுவர்.வெள்ளகோயில் ஆந்தை குலப் பழனிமலைக் கவுண்டர் சிவமலைக்கு அளித்த கொடை பற்றி இலட்சுமன பாரதி இயற்றிய சிவமலைக் குறவஞ்சி புகழுகிறது.

"சாம்ப சிவமலை சரவண பவகுரு
சாமிக்குக் கார்த்திகைச் சோமவா ரத்துக்கும்
தேன்பழம் சர்க்கரை பால்தயிர் நெய்யும்
தினப்படிக்குத் தரும்செல்வர் காங்கேய நாட்டில்
ஆம்பிரா வதிதீர மாகிய வெள்ளக்கல்
ஆந்தை குலத்து வேந்தன் பழனிமலை"
அளித்ததாகப் புலவர் பாடுகிறார்.
சிவமலைக் குறவஞ்சி பாடிய புலவரை,
மருதுறை ஆந்தைகுல சிதம்பர கவுண்டர்,
வெள்ளகோயில் ஆந்தைகுல முத்தணகவுண்டர்,
பெரியண கவுண்டடர்,
வள்ளியறச்சல் ஆந்தைகுல சிவமலைக் கவுண்டர் ஆகியோர் ஆதரித்தவர்கள் ஆவர்.

அலகுமலைக் குறவஞ்சியில்:-
அலகுமலைக் குறவஞ்சியைச் சேர குலச் சின்னதம்பி நாவலர் என்ற புலவர் இயற்றினார்.அந்நூலில் ஆந்தை குல வள்ளல்கள் சிலர் புகழப்பட்டுள்ளனர். அவர்கள்
பெற்றம்பள்ளி ஆந்தைகுலப் பெரியண்ண கவுண்டர்
தென்னமங்கல ஆந்தைகுல வெள்ளையனை கவுண்டர் மற்றும்
குடிமங்கலம் ஆந்தை குலத்தார் ஆவர்.

ஆடை கீறிச் சிலந்தி காட்டியவர்:-
ஆந்தை குலச் செல்வர் குழந்தைவேல் கவுண்டர் சோழனின் நண்பர்.கவுண்டருக்குச் சிலந்தி வந்துவிட்டது.வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள் அரசன் சிலந்தி பற்றி விசாரித்தார்.தொடைப் பகுதியில் இருந்த சிலந்தியை ஆடையை ஒதுக்கி அரசனிடம் காட்டுதல் மரியாதை அல்ல என்று கருதி ஆடையைக் கீறிச் சிலந்தியைக் காட்டினாராம்.இந்நிகழ்ச்சி

"பூந்துகில் ஆடையைக் கீறிச் சிலந்தியைப் பொற்றகரத்தால்
வேந்தன்முன் காட்டிநிலமை கொண்டான்வித்து வான்களுக்கு
ஆந்தை குலாதிபன் குழந்தைநல் வேலன் அமுதம்உண்டு
வாழ்ந்தினத் தேவர் அனைவோரும் வாழ்கொங்கு மண்டலமே"

என்று கொங்கு மண்டல சதகத்தில் புகழப்படுகிறது.

ஆந்தை குல கல்வெட்டுகள்:-

அகிலாண்டபுரம்(காங்கயம்),கூத்தம்பூண்டி,கொங்கூர்,கொற்றனூர்,பெரிய சோறகை,பொன்னிவாடி,முன்னூர்,மோள பாளையம்மலை ஆகிய இடங்களில் ஆந்தை குலக் கல்வெட்டுக்கள் 12 கிடைத்துள்ளன.அவை கோயில் திருப்பணி,நிலக்கொடை,விளக்கு வைத்தல் ஆகிய அறங்களைக் கூறுகின்றன.

முன்னூர், குறிச்சி ஆந்தை குலக் காசி உடையான் சின்னத்தம்பிக் கவுண்டர்,வேலூர் ஆந்தை குலச் சின்னண கவுண்டர் ஆகியோர் முன்னூர் மோளபாளையம் மலையில் படி,படிலுரன் கல்லுக்கட்டு இவைகளைத் திருப்பணி செய்தனர்.

காங்கயம் அகிலாண்டபுரம் அகத்தீசுவரர் கோயில் அர்த்தமண்டபத் திருநிலைகால் அளித்தவர் ஆந்தை குலப் பிள்ளை பிள்ளையாழ்வியான பிறைசூடும் பெருமாள் என்பர்.

பொன்னிவாடி கிராமம் குசவலசு ஆந்தை குலப் புள்ளாக்கவுண்டர் நிர்மலியூர் மலைக்கோயிலை ஜீரண உத்தாரணம் செய்தார். கூத்தம்பூண்டி ஆந்தை குலச் சின்ன செல்லப்ப கவுண்டர் ஒங்காளியம்மன் கோயில் பூதங்களையும்,அத்தனூரம்மன் கோயில் சிகரம்,சுத்து மதில்,முன்சிகரம் ஆகியவைகளையும் அமைத்தார்.கூத்தம் பூணடி புவனேசுவரர் கோயில் புறச்சுவரில் செல்லப்ப கவுண்டர் அவர் தேவி ஆகியோர் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டுப் பெயரும் பொறிக்கப்ட்டுள்ளது.

வடபூவர்ணிய நாட்டுச் சோறகை என்னும் ஊரில் ஆந்தை இளமன் முதலி என்பவர் பிரானீசுவரர் கோயிலைக் கல்பணியாகக் கட்டினார்.அமுதுபடி,சாத்துப்படி.திருப்பணிக்காக ஊர் மக்கள் நிலம் அளித்தனர்.கொங்கூரான ஜெயங்கொண்ட சோழநல்லூரில் பசுபநீசுவரர் பக்தர் ஆந்தை குலப் பிரமாண்டக் கவுண்டர் திருவிளக்கு வைத்து ஆண்டு தோறும் 12 வள்ள நெய் அளிக்க ஏற்பாடு செய்தார்.

செப்பேடுகளில் ஆந்தை குலம் புதுக்காணி பெறல்:-

மேல்கரைப் பூந்துறை நாட்டின் ஐந்தாவது ஊரான பிடாரியூர் பொருளந்தை குலச் செங்கோட கவுண்டர்கள் மகள் வெள்ளை வேலம்மாளை வள்ளியறச்சல் ஆந்தை குலச் சென்னிமலைக் கவுண்டர் மகன் குமர வேலப்ப கவுண்டர் திருமணம் செய்து பிடாரியூரிலே கால் காணி பெற்றதைப் பிடாரியூர்க் காணிப் பட்டயம் கூறுகிறது.4900 வள்ளக்காடு (19600 ஏக்கர்) காணியாகக் கொடுத்த விபரம் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளகோயில் ஆந்தைகுலச் சென்னிமலைக் கவுண்டர் தன் மாமா பரஞ்சேர்வழி ஓதாள குல குள்ள காளிப்ப கவுண்டரோடு சேர்த்து கொண்டு மாட்டுப்பட்டியோடு மேல்கரைப் பூந்துறை நாட்டுத் திருவாச்சிக்கு வந்தவர் வேலாயுதஞ் செட்டியாரிடமிருந்து 1500 பொன்னாகரத்துக்குத் திருவாச்சியை விலைக்கு வாங்கிக் காணி பெற்றார்.

சேவூர் பாளையக்காரர் பாலவேளாளர் வீரவிக்கிரம சோழியாண்டாக் கவுண்டர் மதுரை நாயக்கருக்கு வரிப்பணம் 15000 பொன் கட்ட முடியவில்லை.மருதுறை ஆந்தை குலப் பொன்மேழித் தலைவராகிய கரிச்சிப் பட்டக்காரன் மகன் செல்லப்ப கவுண்டர்,கொற்றனூர் ஆந்தை குல முத்துக் கவுண்டர் மகன் சரவண கவுண்டர் ஆகியோரும் எழுமாத்தூர்ப் பனங்காடை குலப் பொய்ங்காக் கவுண்டரும் ஆகிய மூவரும் ஆளூக்கு 5000 பொன் கொடுத்து அவிநாசி திரு முருகன்பூண்டி,மங்கலம் ஆகிய ஊர்களில் காணி வெற்றனர்.

சாட்சிக் கையொப்பம்:-

தேவப்பராயர் காலத்தில் கொங்கு 24 நாட்டுக்கும் உரிய புலவர் நியமனச் செப்பேட்டில் ஆந்தை குலத்து ஆயிநல்லாக் கவுண்டரும்,காவுலவ வேட்டுவர் தலைவர் விசிய காளிராயரை வென்று ஈஞ்ச குல ரகுநாத சிங்கக் கவுண்டர் தென்கரை நாட்டு நீலம்பூர் காணி பெற்ற செப்பேட்டில் கொற்றனூர் ஆந்தைகுல அவிநாசிக் கவுண்டரும்,மேல்கரை அரைய நாட்டுத் தலைய நல்லூர்க் காணியுரிமை விலைய குலம்,கூறை குல வேளாளருக்கு வேட்டுவர் குலப் பெருமக்களால் மாறும் ஒப்பந்தத்தில் மொஞ்சனூர் ஆந்தை குல நல்லதம்பிக் கவுண்டரும் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர்.

வாரக்க நாட்டு நாரணாபுரத்தார் அங்காள பரமேசுவரிக்குக் கொடை கொடுத்த செப்பேட்டில் வள்ளியறச்சல் ஆந்தை குல மாரப்பகவுண்டரும்,சின்னண கவுண்டரும், மாணிக்காபுரம், வெள்ளகோயில் ஆந்தை குலச் செல்லப்ப கவுண்டரும் கையெழுத்திட்டுள்ளார்.

பாசூர் குருக்களை ஏற்றல்:-
பாசூர் குருக்கள் ஞானசிவாச்சாரியார் இம்முடி அகிலாண்ட தீட்சிதரைக் குலகுருவாக ஏற்றுக் கொங்கு வேளாளர்கள் பலர் கூடிச் செப்பேடு ஒன்று அளித்தனர்.அப்பட்டயத்தில் திருவாச்சி ஆந்தை குலப் பெரிய பொய்ங்காக்கவுண்டர்,பெரிய காளிப்ப கவுண்டர் ,பொன்னே கவுண்டர்,கருமாண்டக் கவுண்டர்,சோளியப்ப கவுண்டர்,ஞானராசாக் கவுண்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மோரூரில் பட்ட துயர்:-

மோரூரில் குடியேறிய கண்ண குல தலைவர் சூரிய காங்கேயன் மோரூர் ஆந்தை குலச் செங்கோட கவுண்டர் வீட்டில் திருமணம் செய்திருந்தார்.அவர் மக்கள் நால்வரும் பாட்டனார் செங்கோட கவுண்டரிடம் காணியுரிமை கேட்டனர்.அவர்"காக்கைக் களரியைத் தூர்த்துக் காடும்,பறையன் குடிசையைத் தூர்த்து வீடும் கட்டிக் கொள்ளுங்கள்" என்று இகழ்ச்சியாகக் கூறினார்.

அதனால் பாண்டியனால் மோரூர் அதிகாரம் பெற்ற சூரிய காங்கேயன்"படை எழுப்பி மோரூர் 32 அமரத்தில் உள்ள ஆந்தை கூட்டத்தையெல்லாம் வெட்டித் துணித்து அவர் தெய்வங்களை எல்லாம் உடைத்தெரிந்து கிணர் குட்டையெல்லாம் மேவினார்"என்று கன்னிவாடி கண்ணர் குலப் பட்டயம் கூறுகிறது.


8 comments:

 1. மயில்ரங்கம் பெரியநாயகிஅம்மனை வழிபடுவோரும் ஆந்தை குலத்தை சார்ந்தவர்கள் தான்

  ReplyDelete
 2. ஒடுவங்குறிச்சி ஆந்தை குலம் குலகுரூ சிவகிரி ஆதீனம் இத் தகவல்கள் சேர்க்கவும் தொடர்புக்கு 9488263354

  ReplyDelete
 3. ஒடுவங்குறிச்சி ஆந்தை குலம் குலகுரூ சிவகிரி ஆதீனம் இத் தகவல்கள் சேர்க்கவும் தொடர்புக்கு 9488263354

  ReplyDelete
 4. சாத்தந்தை யும் ஆந்தை யும் குலம் கல்யாணம் பன்னலாமா ?

  ReplyDelete
 5. சாத்தந்தை யும் ஆந்தை யும் குலம் கல்யாணம் பன்னலாமா ?

  ReplyDelete
 6. இதில் உள்ள தூசியூர் ( தூசூர்)தூசூர் நாடு என்ற ஊர் இன்றும் உள்ளது... 18 பட்டிகும் தலைமை ஊர் இது.... Kudumbar மட்டுமே வாழும் ஊர்

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. கொங்கு வெள்ளாளர், கங்கை சமவெளிப்பகுதியிலிருந்து (மரபாளன் என்கிற கங்காதத்தன் வழி) வந்தவர் என்ற நம்பிக்கை இங்கே சிலருக்கு இருக்கிறது. "தத்தா" என்ற பின்னொட்டுப்பெயர் மராட்டிய மற்றும் வட மாநிலங்களில் பயன்பாட்டில் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை. தன் மூதாதையர் பெயராக இருந்திருந்தால் இது நாள் வரை பயன்படுத்தப்பட்டிருக்குமே.

  கம்பர் வழங்கியதாகச்சொல்லப்படும் "கொங்கு மங்கல வாழ்த்துப்பாடலில்", "கங்கா குலம்" என்று ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
  கம்பரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று வைத்துக்கொண்டாலும் அது தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்திற்கு மிகவும் பிந்தையது ஆகும்.
  தொல்காப்பியத்தில் சொல் புணர்ச்சி விதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆந்தை, சாத்தந்தை, பூதந்தை போன்றவை கொங்கு வெள்ளாளர் குலப்பெயர்களாக இன்றும் வழங்கி வருபவை. எனவே இம்மக்கள் தொல்காப்பியக்காலம் தொட்டு இந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவர் என்பது விளங்கும். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் ஆதனூர், சாத்தனூர் என்ற பெயரில் ஊர்கள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட சங்க காலப்பானை ஓடுகளும் பல இடங்களில் கிடைக்கப்பெற்றிருக்கிறது. கண் முன் இருக்கின்ற சான்றுகளை விடுத்து கதைகளை நம்புதல் சரியானதாகாது. புலவர் குழந்தை எழுதிய கொங்கு நாட்டு வரலாற்று நூலில், கொங்கு வெள்ளாளர் "நீரை (வெள்ளத்தை) ஆள்பவர்" என்ற பொருளில் கங்கா குலம் என்று கம்பர் கூறியிருக்கலாம் என்றும், கங்கைச்சமவெளியிலிருந்து வந்தவர் என்று கூறுவது தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  உருவம், பேசும் மொழி, பழக்க வழக்கங்கள் என்று எவற்றிலும் ஒற்றுமை இல்லாத இரு வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்களை தொடர்புபடுத்துதல் வரலாற்றுப்பிழையாகும். அத்தகைய பிழை, தமிழினத்திற்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்து ஆதாயம் தேட முயல்பவர்களுக்கே பலன் தருவதாய் அமையும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  ReplyDelete